இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகம்மது அசாருதீன் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை சட்டவிரோதமானது என்று ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் இந்த முடிவானது சட்டப்படியாக எடுக்கப்படவில்லை என்றும் ஆந்திர உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் அசாருதீன். அவரது பீல்டிங்கும், பேட்டிங்கும், கேப்டன் பொறுப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டவை.
90களில் கேப்டனாக கோலோச்சி வந்த அசாருதீன் காலத்தில்தான் கபில்தேவ் பந்து வீச்சில் உலக சாதனை படைத்தார். சச்சின் டெண்டுல்கரும் அசாருதீன் தலைமையில்தான் சிறந்த வீரராக உருவெடுத்தார். 99 டெஸ்ட் போட்டிகளோடு அசாருதீன் போட்டியை விட்டு விலக நேரிட்டது. காரணம், அவர் மீது எழுந்த மேட்ச் பிக்ஸிங் புகார்.
மேட்ச் பிக்ஸிங் புகாரைத் தொடர்ந்து 2000மாவது ஆண்டு அசாருதீனுக்கு வாழ்நாள் தடையை விதித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். ஆனால் இந்தத் தடையை நீக்குவது குறித்து 2006ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்தது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் குறுக்கிட்டு, அந்த முடிவை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுக்க முடியாது என்று தடுத்து விட்டது.
இந்த நிலையில் தன் மீதான தடையை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்தார் அசாருதீன். இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிமன்றம், அசாருதீன் மீதான வாழ்நாள் தடை சட்டவிரோதமானது, சட்டப்படியாக இதில் கிரிக்கெட் வாரியம் நடந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !